திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்


திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்

இளையராஜாவின் இன்னிசையில் வந்த திருவாசகத்தினை சமிபத்தில் YouTube'ல் கேட்க நேர்ந்தது. 

அச்சப் பத்து என்ற 10 பாடல்களிலிருந்து 6 பாடல்களை புற்றின் வாழ் என்ற பாடல் துவங்கி கோணிலா வாளி என்ற பாடலில் முடித்து இருப்பார்.

பாடலும் அதன் பொருளும் அருகில் இருந்தால் கேட்பதற்கு மேலும் இரசனையுடன் இருக்கும் என்ற எண்ணத்தில் சில பல வலைகளில் பாடலையும் பொருளையும் தெரிந்து கொண்டு அதனைப் படிப்பதற்கு எளிமைப் படுத்தி கொடுத்து இருக்கிறேன்.



பாடலைப் பொருளுடன் கேட்டு விட்டு உங்களின் கருத்தினை பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.


பாடல்: புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

பொருள்: புற்றில் வளைந்து இருக்கும் பாம்பைக் கண்டு அஞ்ச மாட்டேன். பொய் பேசுபவர்களின் உண்மை போன்ற சொற்களைக் கண்டு அஞ்ச மாட்டேன். அடர்த்தியான நீண்ட சடையை உடைய பெருமைக்கு உரிய நெற்றிக் கண்ணைக் கொண்ட எம்பெருமானின் பாதத்தை அடைந்து, வேறு ஒரு தெய்வம் இருப்பதாக எண்ணி எம்பெருமானை போற்றாதவரைப் பார்த்தால், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்!!

பாடல்: வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;
என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

பொருள்: வன்மையான மாமிசம் கொண்ட வேல் கண்டு அஞ்ச மாட்டேன்; வளையலை அணிந்த பெண்கள் உடைய கடைக் கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்; எலும்புகள் எல்லாம் உருகும் படியாகப் பார்த்து, பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, எனது துளை இடப் படாத மாணிக்கத்தைத் துதித்து, அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு அற்றவரைக் காணின், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்!!

பாடல்: கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியின் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: ஒரு வார்த்தையால் ஆட்கொள்ளும் சொல்லையும் குமிழ் சிரிப்பையும் உடையவன் ஆகிய பெருமானைக் காணப் பெற்றவர், மாதரது அழகிய சொல்லுக்கும் வஞ்சனைச் சிரிப்புக்கும் அஞ்ச வேண்டுவது இல்லை. ஆனால், பெருமானது அருட் கோலத்தைக் கண்டு உருகாதவர்களைக் கண்டால் கடவுளே நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பாடல்: பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பொருள்: எத்தனை நோய்கள் வந்தாலும் பயப் பட மாட்டேன். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன், பிறை நிலாவை அணிகலனாக உடைய சிவபெருமானது தொண்டரோடு பொருந்தி, அத்திருமால் கடினமான் நிலத்தை அகழ்ந்தும் காண முடியாத சிவந்த திருவடியைத் துதித்து, விபூதி அணியாதவரை காணின் கடவுளே! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவு அன்று.

பாடல்: தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே


பொருள்: கட்டுத் தறியிலே பொருந்தி இருக்கும் ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன். நெருப்புப் போன்ற கண்கள் உடைய புலிக்கும் அஞ்ச மாட்டேன். மணம் வீசுகின்ற சடையை உடையவனும் தந்தையும் ஆகிய இறைவனது தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய, கழலணிந்த திருவடிகளைத் துதித்து சிறப்பு உற்று இன்பமாக இருக்க மாட்டாத அறிவு அற்றவர்களைக் காணின் கடவுளே! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவு அன்று.


பாடல்: கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாம் கண்கள் சோரா வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பொருள்: கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன். எமனது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன்.  நீண்ட பிறை ஆகிய அணிகலத்தை உடைய சிவபெருமானை எண்ணி, கசிந்து உருகி நெகிழ்ந்து ஒளி பொருந்திய கண்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக துதித்து நின்று புகழ மாட்டாத ஆண்மை உடையர் அல்லாரைக் காணின் கடவுளே நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவு அன்று.

Comments

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?